சினிமா சூழ் உலகு - பகுதி 1

காலக் காலின் ஞெகிழமே!

இதனைக் கற்பனை செய்து பாருங்கள்,
 
ஒரு கார்ப்பயணம், ஆண் காரை ஓட்டுகின்றான். அருகில் அவன் காதலி. ஒரு கட்டத்தில் காதலன் கன்னத்தில் காதலி ஒரு “இச்”’ வைக்கிறாள். இச் சந்தர்ப்பத்தில் ஒரு பாடல் தொடங்குவதாக அமைக்கப்பட்டிருக்கிறது அந்தக் காணொளி.

ஆம், அது மதன் கார்க்கி 88 திரைப்படத்துக்காக எழுதிய பாடல், இவ்வாறு தொடங்குகிறது.
 
“காலக்காலின் ஞெகிழமே, மனதில் மலரும் மகிழமே”
அழகான தமிழ்ச்சொற்களைக் கொண்டமைந்த இப்பாடலை நரேஷ் ஐயரும் சைந்தவியும் பாடியிருக்கிறார்கள். இசையுடன் கூடி இனிமையாக ஒலிக்கிறது பாடல். மனதை வருடும் இசையும் குரலுமாக ஒரு மெல்லிசைச் சாயலும் கர்நாடக சங்கீதச்சாயலும் அமைந்தது போலிருக்கின்றது. (இசையறிந்தவர்கள் தவறெனின் மன்னிப்பார்களாக)

அமிர்தவர்ஷினி ராகத்தில் அமைந்த (குறித்த இணையப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததன் படி.. ராகம்: அமிர்தவர்ஷினி, தாளம்: ஆதி) இந்தப்பாடலின் பின்னணியாக மழைக்காட்சி இருப்பது ஒரு குறியீடோ என்று எண்ணத் தோன்றுகிறது.
 
அமிர்தவர்ஷினி ராகம் மழையை வரவழைக்க வல்லது என்கின்றார்கள். இது 66ம் மேளகர்த்தா ராகமாகிய சித்ரம்பரி ராகத்தின் ஜன்ய ராகமாகக் கருதப்படுகின்றது. முத்துஸ்வாமி தீட்ஷிதரின் வரலாற்றில் ஒரு சம்பவம், எட்டயபுரத்தின் அருகே வரட்சி ஏற்பட்டு நீர்நிலைகள் காய்ந்திருந்த போது அமிர்தவர்ஷினி ராகம் பாடி மழை வரவழைத்தாராம் தீட்ஷிதர்.



இந்த ராகத்தில் அமைந்த தமிழ் சினிமாப்பாடல்களில் ஒன்று “தூங்காத விழிகள் ரெண்டு”.

தொடரும்...
 ***

இங்கு பயன்படுத்தப்பட்ட படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை, காப்புரிமைக்குட்பட்டதென அறிவிக்கப்படுமிடத்து அவை நீக்கப்படும். நன்றி.

Images : Downloaded from Google. Some of these images may be copyrighted. If so they will be removed from this blog. Thank you.



நிறோஷ் ஞானச்செல்வம்
2017.03.14

Comments