சினிமா சூழ் உலகு - பகுதி 6
காலக் காலின் ஞெகிழமே - 6
அசுணம் 2
பொதுவாகக் கவிதைகளில் ஆண் பெண்ணை மானே, மயிலே, முயலே, குயிலே என்பான், இங்கு ஒரு மாறுதலுக்காகப் பெண் ஆணை அசுணமே என்கின்றாள் போல. :)
அசுணம் குகைகளில் வாழ்ந்த ஒரு விலங்கு.
“விழுந்த மாரிப் பெருந்தண்..” என்ற நற்றிணைப் பாடலில் (பாடல் 244)
"தீங்குரல் மணம்நாறு சிலம்பின் அசுணம்" என்ற வரிகளால் அதைப் பற்றிச்சொல்லப்படுகின்றது. இதில் வண்டின் இனிமையான ரீங்காரத்தைக் குகைக்குளிருந்து அசுணம் கேட்கும் என்கின்றார் கூற்றங்குமரனார்.
அதே போல்
“மணிமிடைப் பொன்னின்..” என்ற பாடலில் (பாடல் 304) அசுணத்தை கொல்பவர் கையைப் போன்றது ("அசுணம் கொல்பவர் கைபோல்..") காதலனின் மார்பு என்று தலைவி சொல்வதாக வருகின்றது.
அதாவது அசுணத்தைக் கொல்பவர்கள் யாழ் இசைத்து அசுணத்தைக் கவர்ந்து பின் முரசை ஒலிப்பார்களாம். யாழொலியால் மகிழ்ந்து வெளிவந்த அசுணம் முரசின் சத்தம் தாங்காமல் இறந்துவிடுமாம். (sonic bomb conceptக்கு இது ஒத்துப்போவதாக லண்டன் சுவாமிநாதன் தன் வலைப்பூவில் எழுதியுள்ளார்.) இதே போலத் தலைவன் மார்பும் தலைவிக்கு முதலில் இன்பம் தந்து பின் துன்பம் தருவதாகும் என்கின்றார் மாறோக்கத்து நப்பசலையார்.
மேலும் அகநானூற்றில் (பாடல் 88) , ஈழத்துப்பூதந்தேவனார் வண்டின் ஒலியை யாழொலி எனக்கருதி அசுணம் கூர்ந்து கேட்கும் என்கின்றார் ("இருங்கல் விடரளை அசுணம் ஓர்க்கும்").
நான்மணிக்கடிகையில் அசுணமா என்கின்றார்கள். மீண்டும் அதே பொருளில் வந்துள்ளது, அதாவது பறையொலிக்கு அசுணம் வாழாது. ("பறைபட வாழா அசுணம்")
இவைபோக,
கம்பராமாயணத்தில் “துறையடுத்த விருத்தத் தொகைக்கவிக்கு..” என்ற பாடலிலும் அசுணம் அதே கருத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளது.
("நறையடுத்த அசுணநல்மாச் செவிப் பறை"). அதாவது சான்றோர்கள் மத்தியில் தன் விருத்தத்தைப் பாடினால் அது அசுணத்தின் காதில் வீழ்ந்த பறையொலி போலிருக்கும் என்று சொல்லித் தன்னவையடக்கத்தைக் காண்பிக்கின்றார் கம்பர்.
ஆக, அசுணத்தை வேட்டையாடி அழித்திருக்கிறார்கள். அது ரசித்த இசையே அதன் அழிவுக்கு வழிகோலியிருக்கிறது. இக் கால செல்ஃபி மோகம் போல...
தொடரும்...
அசுணம் தொடர்பான பல தகவல்களை லண்டன் சுவாமிநாதன் அவர்கள் வலைப்பூவிலிருந்து அறிந்தேன், நன்றி.
//அசுணம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு:
லண்டன் சுவாமிநாதன் வலைப்பூ: http://swamiindology.blogspot.com/2014/04/blog-post_6136.html //
நிறோஷ் ஞானச்செல்வம்
2017.03.21
Comments
Post a Comment