ஈசனின் ஈழம் - திருக்கோணேச்சரம்

அகல் மின்னிதழுக்காக இலங்கைச் சிவாலயங்கள் பற்றி எழுதப்பட்ட ஒரு கட்டுரைத் தொடர் ஈசனின் ஈழம்.

மூன்றாவது கட்டுரை திருக்கோணேச்சரம் ஆலயம் பற்றியது. இது அகல் மின்னிதழின் சிவராத்திரி சிறப்பிதழில் "சிவாய நம" எனும் தலைப்பில் வெளியானது.


மின்னிதழ் இணைப்பு இதோ: ஈசனின் ஈழம் (2017 February)
***

திருக்கோணேச்சரம்



“கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே” என்று திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமெனும் சிறப்புடன் விளங்குகின்றது சிவபூமியின் கீழ்த்திசையில் அமையப்பெற்ற திருக்கோணேச்சரத் திருத்தலம்.

கிழக்கிலங்கையின் தலைநகராகிய திருகோணமலையில் அமையப்பெற்றுள்ள இவ்வாலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய சிறப்புகளைக் கொண்டதாகும். இது ஈசன் எழுந்தருள்புரிகின்ற பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாக விளங்கும் சிறப்புமுடையது. அத்துடன் இது தட்சண கைலாயம் என்றும் அழைக்கப்படுகின்றது.

இங்கு ஈசன் கோணேச்சரப் பெருமானாக அன்னை மாதுமையாளொடு எழுந்தருளியுள்ளான். சிவனை மூர்த்தியாகக் கொண்டமைந்த இவ்வாலயத்தின் தலவிருட்சம் கல்லால மரமாகும். இம்மரம் திருக்கோணமாமலையில் கருங்கல்லில் வேர்விட்டு நிற்கின்றது. ஆலயத் தீர்த்தமாகப் பாபநாசத் தீர்த்தம் எனப்படும் பாபநாசச்சுனை (தீர்த்தக்கிணறு) விளங்குகின்றது. இது அடியார்களின் பாவங்களைத் தீர்ப்பதாக நம்பப்படுகின்றது.


ஆலயமுன்றலில் ஈசன்

ஆலய வரலாறு:

ஆலயம் கிமு 1300ஆம் ஆண்டின் முன்பே மனு மாணிக்கராஜாவால் கட்டப்பட்டதாகச் சில கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இதற்கு முன்பே மலையடிவாரத்தில் ஒரு ஆலயம் இருந்ததாகவும் அது கடல்கோளால் மூழ்கடிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது
கிபி 1622 - 1624 காலப்பகுதியில் போர்த்துக்கேயர் படையெடுப்பின் காரணமாக ஆலயம் இடிக்கப்பட்டது. அவ்வேளை நலன்விரும்பிகளால் திருவுருக்கள் மறைத்துவைக்கப்பட்டன. அவற்றில் ஒன்று தம்பலகாமம் எனும் இடத்தில் நிறுவப்பட்டு ஆதிகோணேச்சர ஆலயம் அமைக்கப்பட்டது.
450 வருடங்களின் பின் சுதந்திர இலங்கையில் 1952ஆம் ஆண்டு ஆலயம் மலையுச்சியில் மீளக்கட்டுவிக்கப்பட்டது. இது மூலக்கோயிலை விடச்சிறியது. இங்கு நிறுவப்பட்ட மூர்த்தி (சிவலிங்கம்) காசியிலிருந்து கொண்டுவரப்பட்டதாகும்.




கிணறு தோண்டப்படும் பொழுது மாதுமையாள் சமேத கோணேசர், சந்திரசேகரர், பார்வதி, பிள்ளையார், அஸ்திரதேவர் முதலிய திருவுருக்கள் கிடைக்கப்பெற்றன. அவை ஆலயத்தில் நிறுவப்பெற்றன.

இராவணன் வெட்டு:




சிவலிங்கம் ஒன்றை அடையவேண்டி இராவணன் ஈசனை வழிபட்டதாகவும் ஈசன் காட்சியளிக்காததால் கோபம் கொண்டு மலையை வெட்டியதாகவும் பின் இறைவனால் தண்டிக்கப்பட்டு சாமகானம் மீட்டி ஈசனைக் குளிர்வித்து லிங்கம் பெற்றதாகவும் ஆலயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக மலையில் பிளவு ஒன்று காணப்படுவதுடன் அது இராவணன் வெட்டு என அழைக்கப்படுகின்றது.
இங்கு இராவணன் சிலை அமைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.




பூசை விபரம்:
ஆகம முறைப்படி நித்திய பூசை ஆறுகாலங்களிலும் நடைபெறுகின்றது. ஆலய மகோற்சவம் பங்குனி உத்தரத்தன்று கொடியேற்றத்துடன் தொடங்கிப் பதினெட்டு நாட்களுக்கு நடைபெறுகின்றது.

சிவராத்திரியும் இங்கு மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. அத்துடன் ஆண்டு தோறும் திருக்கோணேச்சரப்பெருமானின் நகர்வலமும் நடைபெறுகின்றது.


திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற இத்தலம் பற்றித் திருப்புகழிலும் குறிப்பு உள்ளது.
திருப்புகழிலுள்ள
“நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்
திருக்கொ ணாமலை தலத்தாரு கோபுர
நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் வருவோனே” என்ற
வரிகளால் இத்தலம் குறிக்கப்பட்டுள்ளது. (திருக்கொணாமலை - திருக்கோணமலை)

கிபி 1380களில் ஜெயவீர சிங்கைஆரியன் என்பவரால் எழுதப்பட்ட தட்சிண கைலாய புராணம் இவ்வாலயத்தின் தலபுராணமாகும்.
திருக்கோணேச்சரத் தேவாரத் திருப்பதிகம், கோணேஸ்வரர் குறவஞ்சி, திருக்கோணேஸ்வரர் அகவல், திருக்கோணமலை அந்தாதி முதலியன இக்கோயில் மேல் எழுந்த இலக்கியங்களாகும்.


வழி:
கொழும்பிலிருந்து (260.4 km) அம்பேபுஸ்ஸ - குருநாகல ஊடாக திருகோணமலையை அடையலாம் (Trincomalee Highway / A6 வீதி)

தொடர்புகளுக்கு:

Thiru Koneswaram Temple
Trincomalee, Sri Lanka.

(திருக்கோணேஸ்வரம் ஆலயம்,
திருகோணமலை, இலங்கை)

தொலைபேசி இலக்கம்:
ஆலயம் : +94 26 326 7588
பணிமனை : +94 26 222 6688

மின்னஞ்சல் முகவரி: webmaster@koneswaram.com


ஞா. நிறோஷ் (நிறோஷ் ஞானச்செல்வம், இலங்கை )
***

இங்கு பயன்படுத்தப்பட்ட படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை, காப்புரிமைக்குட்பட்டதென அறிவிக்கப்படுமிடத்து அவை நீக்கப்படும். நன்றி.

Images : Downloaded from Google. Some of these images may be copyrighted. If so they will be removed from this blog. Thank you.

Comments