காடுகளைக் காப்போம்

(எண்சீர் ஆசிரிய விருத்தம்)

காடுகளா லாயபயன் என்னே யென்பர்
.. கற்றறியா மூடரென்பேன் துணிந்து நானே
கூடுகளுள் வாழ்கின்ற புட்கள் கூடக்
.. கொஞ்சுமொழி யாலவற்றை வாழ்த்தி வைக்கும்
ஓடுகின்ற மானிடர்க்கு நேரம் இல்லை
.. உன்னதத்தைக் காக்கின்ற கடனை விட்டார்
பாடுபொருள் ஆகவின்று காட்டைக் கொண்டேன்
.. பாங்காக ஒருதினமும் அமைந்த தாலே!

மண்ணரிப்பைத் தடுத்துவைக்கும் மரத்தின் வேர்கள்
.. மண்துணிக்கை களைப்பலமாய்ப் பற்றி வைத்து
தண்ணிலையைக் கூட்டுவதும் காட்டின் வேலை
.. தங்கிளையால் நிழலளிக்கும் விதானம் செய்து
நுண்ணிலையும் காடளிக்கும் நன்மை யாகும்
.. நுண்ணுயிர்கள் வாழ்ந்திருக்க வழிய மைக்கும்
எண்ணரிய நன்மைகளை வழங்கும் காட்டை
.. இன்றேனும் காக்கவெனச் சபதம் கொள்வோம்

உணவளிக்கும் உடையளிக்கும் வனவு யிர்கள்
.. உறைந்திருக்க இடமளிக்கும் காடு வாழி
மணமுள்ள மலரளிக்கும் விறகு கட்டை
.. மரமளிக்கும் மழையளிக்கும் காடு வாழி
இணக்கத்தைக் காட்டோடு கொள்வீர் இல்லை
.. இயற்கையியக் கத்தையிழப் பீர்பின் னாளில்
வணங்குதலின் தவறிலையென் றெண்ணி அந்நாள்
.. வணங்கிவந்தார், சற்றேனும் மதித்துக் காப்போம்.

அலைகின்ற கனிமத்தின் சுழற்சி தன்னில்
.. ஆற்றுகின்ற பங்களிப்பை என்ன சொல்ல
விலைகொடுத்து எதையேனும் வாங்க லாமே
.. வீணர்களின் பேச்சாகும், உண்மை ஏற்பீர்
விலையில்லாக் காடழித்த பின்னால் எஞ்சும்
.. வெற்றிடத்தில் வீடுகட்டி என்ன செய்வீர்
நிலைத்திருக்கும் வனமுகாமை இந்நாள் செய்து
.. நீடிப்போம் காடுகளின் ஆயுட் காலம்

பாங்காக ஒரு தினம் - Forest day, வனதினம் மார்ச் 21, March 21
நுண்ணிலை - நுண்காலநிலை - microclimate
கனிமத்தின் சுழற்சி - mineral cycle
நிலைத்திருக்கும் முகாமை - நீடித்து நிலைக்கும் வனமுகாமை - sustainable forest management

நிறோஷ் ஞானச்செல்வம்
2017.03.21

Comments