சிட்டுக்குருவிகள் தினம்

மார்ச் 20 சிட்டுக்குருவிகள் தினமாம்...

சிட்டுக்குருவிக்கும் எனக்கும் சொல்லிக்கொள்ளும்படியான பந்தம் எதுவும் இல்லை. பத்தாம் தரத்தில் கற்கும் போது பாரதியார் எழுதிய சிட்டுக்குருவிகள் பற்றிய கட்டுரை ஒரு பாடமாக இருந்தது.

அதைப்படித்துவிட்டுக் கிறுக்கியது இது. இது மரபு கவிதையல்ல. பாரதியின் கவிதைகளைப் பார்த்து மரபு கவிதை என்று நினைத்துக் கிறுக்கியது. எந்த வித மாற்றமும் செய்யாமல் பதிகின்றேன். வழக்கம் போல எனது நீண்ட பதிவுகளைப் படிக்காமல் கடப்பவர்கள் கடந்து விடுக!

***

சிட்டுக்குருவி (Sparrow)


சின்னச்சிட்டுக் குருவி
சிங்காரமாய்ப் பறக்கையிலே
என்றன் மனது துடிக்கிறது
எம்பிக் குதித்துப் பறக்கிறது
வண்ணப் பறவையைப் பார்க்கையிலே
வாஞ்சையுடனே என்மனது
கண்ணிமைக்காமல் பார்த்திடவே
கட்டளை இட்டு நிற்கிறது. (மனது - மனம்)

துளித்துளிக் கால்களுடன்
துன்பம் எதுவும் அற்றதுவாய்
களிகொண்டு பறக்கிறது
கவலை மறக்க வைக்கிறது
வெளிச்சம் ஏற்றி வாழ்விருளை
வெகுதூரமாய் அகற்றுதல்போல்
நளினம் கொண்டு பறக்கிறது - இது
நனவே என்று உரைக்கிறது

பட்டுப் போர்த்த முதுகுடனே
பவ்வியமாகப் பறக்கிறது
விட்டுவிடு உன் துயரங்களை என்று
வெகுவாய்ச் சொல்லிப் பறக்கிறது
கட்டுக்களை அறுத்தெறிந்து
கடுகதியில் அது பறக்கிறது
சிட்டுக்குருவி ஆன அது
சின்ன உடலுடன் பறக்கிறது

சிறிய தோகை கொண்ட அது
சிறுமை நீக்கிப் பறக்கிறது
வறிய உள்ளங்களினது
வடுக்கள் நீக்கிப் பறக்கிறது
அறியாமைக் குணங்களினை
அகற்றி அதுவும் பறக்கிறது
அறியாமற் செய்த பிழைகளினை
அகற்றச் சொல்லிப் பறக்கிறது

வேறு

பேதங்கள் இல்லை குருவி வாழ்வில்
பிரிவுகளும் இல்லை
வாதங்கள் இல்லை குருவி வாழ்வில்
வன்முறைகள் இல்லை
சீதனக் கொடுமைகள் இல்லை குருவி வாழ்வில்
சிறுமைகளும் இல்லை
ஆதலின் இன்பம் சிட்டுக்குருவியின்
ஆனந்த வாழ்வு

வேறு

சிட்டுக்குருவியை நித்தம் காணச்
சித்தம் ஏங்குது
பட்டுப் போர்த்த உடலினைக்காணப்
பாட்டும் தோன்றுது
எட்டுச் சாண் உடலில் இன்னும்
உயிரது உள்ளவரை
சிட்டே உன்னைத் தினம்காண என்
சித்தம் நாடுது

பதிவை முழுமையாகப் படித்த உங்களுக்கு என் நன்றி. ;)

*** 

இங்கு பயன்படுத்தப்பட்ட படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை, காப்புரிமைக்குட்பட்டதென அறிவிக்கப்படுமிடத்து அவை நீக்கப்படும். நன்றி.

Images : Downloaded from Google. Some of these images may be copyrighted. If so they will be removed from this blog. Thank you.
 

நிறோஷ் ஞானச்செல்வம்
2017.03.20

Comments