மண்ணில் தமிழரின் மாண்பு!



பதிவு சற்று நீண்டது, பொறுமையுடன் வாசிக்கும் நண்பர்களுக்கு நன்றி... :)
-------------------------------------------------------------------------------------------------------

மண்ணில் தமிழரின் மாண்பினைப் போற்றியான்
பண்ணுடன் பாடலும் பாடிட - எண்ணத்தில்
ஒன்றிட வேண்டும் ஒளியாய்த் தமிழன்னை
நின்றிட வேண்டும் நிலைத்து
(காப்பு வெண்பா)

--------------------------------------------------------------------------------------------------------
எண்ணும் எழுத்தும் இயைந்திடு நன்மொழி
விண்ணது  முட்டிடும் மேன்மையும் - கொண்டுநம்
கண்ணெ னவான கவின்தமிழ் சேர்த்திடும்
மண்ணில் தமிழரின் மாண்பு
(நேரிசை வெண்பா)

முந்திச் சுழியம் அளித்தாரதை இன்மை என்றும்
நந்த மிழர்தான் கணித்தாரதைப் பாழெ னத்தான்
புந்தி தெளிந்து உரைத்தாரவர் இங்கு நன்று
வந்திக் கவேண்டு மவர்தாமுடை போத மொன்றே
(காப்பியக் கலித்துறை)

உலோகக் கலசங்கள் உடையதொ ருகோபுரம்
உலோக மதனுள்ளே உகந்ததா னியங்கள்
மின்தாங் கியெனவே விளங்கிற் றன்று
மின்னலின் தாக்கம் விலக்கிற் றுநன்று
அறிவியல் தனிலும் அமைந்த நல்லாற்றல்
பிறிதிலும் சிறந்த பெருமைத் தமிழர்
வாழ்வாங் குவாழவே வடிப்பேன் பாடலும்
வாழ்ந்திடும் தமிழரின் மாண்பது மண்ணிலே
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அணுவி யலுலகிற் களித்தார்
கணியா தனாரெனுந் தமிழர்
கணித மதனிலும் கணியர்
மணிம குடமணிந் தமன்னர்

எத்துறை யாயினும் எம்மவர்
முத்தென நின்றனர் முந்தியே
கத்திடும் போரிலும் கத்தியின்
வித்தகம் காணுதல் வியப்பே
(வஞ்சி விருத்தம்)

வேறு

எத்துறை காணினும் எத்துணைத் தீர்க்கம்
அத்துணைப் புகழும் அடைந்தார் தமிழர்
திரைகட லோடியும் திரவியம் தேடிட
விரைந்தவர் அறிந்தார் விரிகடல் முகாமை
இலையினில் உணவினை இடுவதும் அழகுறு
கலையென அவர்தாம் கண்டார் முறைமை
வைத்திய முறைகள் வையத்தில் பெருகிப்
பொய்த்திடு முறைகள் பின்னோக்கி யோடிட
நற்றமிழ் மருத்துவம் நந்தமிழர் தந்தார்
கற்றவை பிறர்க்கும் கனிவாய் அளித்தார்
இல்லற வாழ்வும் இனிதாய் அமைந்திட
நல்லறம் வகுத்தார் நன்மக்கள் வாழ்ந்திட
வள்ளுவம் முதலாம் வண்டமிழ் நூல்கள்,
உள்ளும் வகையில் ஒண்டமிழ் செய்தார்
வீரப் பெண்ணாள் விரட்டிய புலியின்
தீரக் கதையைத் திறம்படச் சொன்னார்
காதல் விளங்கிடு காவியம் படைத்தார்
மோதல் நீங்கிட முறைகளும் பணித்தார்
அத்துணைச் சிறப்பும் அந்தமிழ்ப் பாவினில்
மொத்தமாய்ச் சொல்லவும் முடியுமோ எனக்கும்
இருந்த போதிலும் இயன்ற மட்டும்
அருந்தமிழ் கொண்டு அழகுறச் சொன்னேன்
மண்ணில் தமிழரின் மாண்பு
விண்ணுறப் பெற்றிடும் மேன்மை நலமே!
(நேரிசை ஆசிரியப்பா)

ஞா.நிறோஷ்
2015.12.08

முகநூலில் என் கவிதைகளை வாசிக்க...
பக்கத்தை அணுகவும் .

நன்றி நண்பர்களே...

(Images : Downloaded from Google. Some of these images may be copyrighted. If so they will be removed from this blog.
படங்கள் : Googleஇல் இருந்து தரவிறக்கப்பட்டவை. இவற்றில் சில காப்புரிமை பெற்றிருக்கலாம். அவ்வாறான சந்தர்ப்பத்தில் அவை இவ் வலைப்பூவிலிருந்து நீக்கப்படும்.)

Comments