மரபு கவிதையும் இன்றைய நிலையும்

மரபு கவிதை... இந்தச் சொல்லைக் கேட்டதுமே இன்றைய இளைஞர்களில் பலர் இதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று ஒதுங்கி விடுவார்கள்.
இதற்காக முதலில் அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு புரியாத சொற்கள்.
இன்றைய இளைஞர்களின் மிக முக்கிய பிரச்சினை, வாசிக்காமலே கருத்துச் சொல்வது. எடுத்த எடுப்பிலேயே “மரபு கவிதையா! அது புரியாது, புரியாத சொற்கள் இருக்கும்” என்றெல்லாம் சொல்லிவிடுவார்கள். “எனக்குப் புரியவில்லை, இருப்பினும் ஆழ்ந்து வாசிக்கின்றேன்” என்று சொல்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். இருப்பினும் வெகு குறைவு.
நாமொன்றும் வேற்றுமொழிச் சொற்களைப் பயன்படுத்திக் கவிதை எழுதிவிடுவதில்லை. ஆனாலும் திரையிசைப் பாடல்களில் பொருள் புரியாத சொற்கள் வந்தாலும் குறைசொல்லாது இரசிப்பார்கள். அல்லது பொருளேயில்லாத சொற்கள் வந்தாலும் அவ்விதமே.
சில பாடல்களில் சில நடைமுறையில் அதிகளவாகப் பயன்படுத்தப்படுகின்ற சொற்கள் வந்தாலும் அவை இந்தளவுக்கு விவாதிக்கப்படுவதில்லை. இவையே மரபு கவிதையில் வந்துவிட்டால் உடனே புரியாத சொற்கள் என்று சொல்லிக்கொண்டு ஒரு கூட்டம் வந்துவிடும்.
எடுத்துக்காட்டாகச் சில திரையிசைப்பாடல்கள்,
1.என்னவளே அடி என்னவளே – கோகிலமே நீ குரல் கொடுத்தால்...
2.அம்மா நீ சுமந்த பிள்ளை சிறகொடிந்த கிள்ளை
3.தத்தை தத்தை தத்தை
இதே போலப் பல எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும்.
இது போக வேற்றுமொழிப் பாடல்களையும் இரசிப்பார்கள். கேட்டால் இசையை இரசிக்கின்றோம் என்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு தமிழ்க் கவிதையில் என்ன சொல்லப் பட்டிருக்கின்றது என்பது பற்றிச் சிந்திக்க நேரமில்லை.
தமிழன், தமிழ் மொழி, தமிழுணர்வு என்றெல்லாம் சொல்லிக் கொள்பவர்கள் கூடத் தமிழ் மொழியிலுள்ள ஒரு சிறப்பம்சமான மரபு கவிதையை ஏற்கமாட்டார்கள். இந்தக்காலத்தில் நாமொன்றும் சங்கத்தமிழில் பயன்படுத்தப்பட்டது போன்ற சொற்களைக் கொண்டு எழுதுவதில்லை. இலகுச் சொற்களைக் கொண்டு பாவியற்றுபவர்களும் அதிகளவில் இருக்கின்றார்கள் என்பது ஏனோ உணரப்படுவதில்லை. ஒரு சில இடங்களில் இலக்கண வழுவைத் தவிர்ப்பதற்காக சில மாற்றுச் சொற்கள் பயன்படுத்துகின்ற கட்டாயம் வரலாம். அதற்காக அவை புரியாத சொற்கள் என்று ஆகிவிடாது.
எ.கா : கிளி – கிள்ளை, குயில் – கோகிலம்
ஆங்கிலத்தில் படிக்கும் பொழுது தெரியாத சொற்களுக்காக அகராதி புரட்டுபவர்கள், தமிழில் அறியாத சொற்களுக்காக அகராதி பயன்படுத்துவதைக் கேவலமாக நினைக்கின்றார்கள்.
மரபு கவிதை என்றால் அறுபது, எழுபது வயதுடையவர்கள், கலைப்பிரிவில் கற்பவர்கள், முனைவர்ப் பட்டம் பெற்றவர்கள், தமிழ்ப் பண்டிதர்கள் போன்றோர் மட்டுமே எழுதுகின்றார்கள் அல்லது எழுதவேண்டும் என்பதே இன்றைய தலைமுறையின் பெரும்பான்மைச் சிந்தனையாக இருக்கின்றது.
நான் இதுபற்றி எழுதும் போது இருபதுகளின் ஆரம்பத்திலேயே இருக்கின்றேன். அதற்காக நான் ஒன்றும் மரபில் பாண்டித்யம் பெற்றவனல்லன். மரபில் ஆர்வம் கொண்டு அதன் அடிப்படைகளைப் பயின்று ஒரு சில கவிதைகளை எழுதியுள்ளேன்.
சில வார்த்தைகளைக் கோத்து எழுதப்படுகின்ற வசனக் கவிதைகளையே அவர்கள் கவிதைகளாகக் கருதுகின்றார்கள் போலும். இதற்காகப் புதுக்கவிதை என்று சொல்லப்படும் கவிதை வடிவத்தை இகழவில்லை. கருத்தோட்டமும், இலக்கிய நயமும், சந்தமும் கொண்ட சிறப்பான புதுக்கவிதைகளும் எழுதப்படுகின்றன இன்று. ஆக அவற்றையும் ஒதுக்கித்தள்ளிவிட முடியாதபடி அவை இருக்கின்றன.
இருப்பினும் மரபு கவிதை அடிப்படைகளையேனும் அறியாது, மரபு வடிவங்களிலும் எளிமையான வார்த்தைகளைக் கொண்டு அனைவர்க்கும் புரியக்கூடிய வகையிலும் கவிபாடலாம் என்பதைனைச் சிந்திக்காது, எதுவித முயற்சியும் செய்யாது மரபினைச் சாடுவதனை ஏற்கமுடியாது.
சில அடிப்படைப் புரிந்துணர்வுகளையும் சிந்தனைகளையும் திருத்தியமைப்பார்களாயின் எல்லோராலும் மரபு கவிதையையும் ஏற்றுக் கொள்ள முடியும்.
ஞா.நிறோஷ் அரவிந்த்
2016.01.16

Comments