ஈசனின் ஈழம் - பொலன்னறுவைச் சிவாலயங்கள்

அகல் மின்னிதழுக்காக இலங்கைச் சிவாலயங்கள் பற்றி எழுதப்பட்ட ஒரு கட்டுரைத்தொடர் ஈசனின் ஈழம்.

முதலாவது கட்டுரை பொலன்னறுவைச் சிவாலயங்கள் பற்றியது.

மின்னிதழ் இணைப்பு இதோ: ஈசனின் ஈழம் (2016 October)

***


சிவபூமி என்று திருமூலரால் அழைக்கப்பட்ட ஈழத்திருநாட்டில் ஈசன் அமர்ந்தருளும் தலங்கள் பற்றிய ஒரு தொடரே இது!

இது ஒரு பயணக்கட்டுரையாக அமைந்திருப்பின் சிறப்பாக இருந்திருக்கக்கூடும். இருந்தபோதும் சில காரணங்களால் அவ்வாறு வழங்கமுடியவில்லை. எனவே முடிந்தவரை படித்தறிந்த தகவல்களையும், கேட்டறிந்த தகவல்களையும் தொகுத்து உங்கள் முன்வைக்கின்றேன். 

இது ஒரு பெரும் பணி, இந்த வாய்ப்பை வழங்கிய சகோதரர் சத்யா அவர்களுக்கு என் நன்றி! சிவப்பணி சிறப்பாக நடந்தேற ஈசன் துணையாகட்டும்.

நிறைகளைத் தங்கள் உள்ளங்களுள் நிறைத்துக் கொண்டு குறைகளை என் பக்கம் அனுப்பிவிடுங்கள்.
நன்றி!
-----------

ஈழத்தில் சிவவழிபாடு என்பது பலகாலமாகவே நிலவிவருவதற்கான இலக்கியச் சான்றுகளும், கல்வெட்டுக் குறிப்புகளும் காணப்படுகின்றன. இப்படியாக நிலவிவந்த வரலாற்றில் சோழர் படையெடுப்பும் அவர்கள் ஆட்சியும் இலங்கையின் சிவவழிபாடு இன்னும் பரவலாக்கப்பட்டமைக்குப் பக்கபலமாக இருந்தன எனலாம்.
இதை உறுதி செய்யும் விதமாகவே இன்றளவும், சோழர்களால் 'ஜனநாத மங்களம்' என்றழைக்கப்பட்ட பொலன்னறுவையில் காணப்படுகின்ற சிவாலயச் சிதைவுகளும், சிவாலயங்களும் அமைந்திருக்கின்றன.
பொலன்னறுவைக் காலத்தில் ஐந்து சிவாலயங்கள் அமைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்ற போதிலும் நாம் முதலாம், இரண்டாம் சிவாலயங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

முதலாம் சிவாலயம்
---------------------------------
இது பதின்மூன்றாம் நூற்றாண்டில் பாண்டியர் கட்டிடப்பாணியில் அமைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. பொலன்னறுவையிலுள்ள நாற்சதுர மேடைக்கு அருகில் (தெற்குப்பகுதியில்) இந்தச் சிவாலயம் அமைந்துள்ளது. இது மேற்கூரை இழந்த நிலையில் சிதைவடைந்த ஒரு ஆலயமாகவே காணப்படுகின்றது. இருந்தபோதிலும் பிரதான மூர்த்தியாக ஆலயத்தினுள்ளே சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோயிலில் மக்கள் இப்பொழுதும் வழிபாடு செய்கின்றார்கள். இங்கு லிங்கத்திற்கு அபிசேகம் செய்யப்பட்ட பாலை அருந்துவதன் மூலம் பிள்ளை பாக்கியம் பெறலாம் என்பது உள்ளூர் மக்களின் நம்பிக்கையாக இருக்கின்றது.




படம்: srilankatravelnotes.com இலிருந்து பெறப்பட்டது.

இரண்டாம் சிவாலயம்.
--------------------------------------
இது இலங்கையிலுள்ள (பொலன்னறுவையிலுள்ள மிகப்பழைய)  புராதனமான ஆலயமாக அறியப்படுவதுடன் இன்றளவும் சீரான நிலையில் காணப்படுகின்றது. இது முதலாம் இராஜராஜனால் பதினொராம் நூற்றாண்டில் கட்டப்பட்டது (கி.பி 985-1014).

(இவ்வாலயம் பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகவும், பதினொராம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகவும் இரு வேறுபட்ட தகவல்கள் கிடைக்கின்றன.)

வானவன் மாதேவி ஈச்சரம் என்ற பெயரால் இது அழைக்கப்படுவதனால் இாஜராஜனின் தாயின் நினைவாக அமைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. கோயிலின் நடுவில் கல்லால் அமைக்கப்பட்ட சிவலிங்கம் பிராதன மூர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளதுடன் கோயிலுக்கு முன்பாக நந்தியின் உருவமும் வைக்கப்பட்டுள்ளது. இன்றும் இங்கு பூசைகள் நடாத்தப்படுவதாகத் தகவல்கள் கிடைக்கின்றன.

 இவ்வாலயம் நாற்சதுர மேடையிலிருந்து 3.1 கி.மீ தொலைவில் அமைந்திருக்கின்றது. இது சோழக் கட்டிடக்கலைக்கு ஒரு சான்றாகும். அத்துடன் ஆலயம் கற்றளியாக அமைந்துள்ளது இதன் சிறப்பாகும்.




படம்: srilankatravelguide.lk இலிருந்து பெறப்பட்டதாகும்.

பொலன்னறுவை கொழும்பிலிருந்து 216 கி.மீ தொலைவில் உள்ளது.
பாதை விபரம்: கொழும்பு - அம்பேபுஸ்ஸ - தம்புள்ள - பொலன்னறுவை

(பயணம் தொடர்பான மேலதிக தகவல்களை http://amazinglanka.com/wp/shiva-kovil-no-1 குறித்த இணையத்தளத்தில் கண்டுகொள்ளலாம்.)

ஞா. நிறோஷ் (நிறோஷ் ஞானச்செல்வம்)

***
இங்கு பயன்படுத்தப்பட்ட படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை, காப்புரிமைக்குட்பட்டதென அறிவிக்கப்படுமிடத்து அவை நீக்கப்படும். நன்றி.

Images : Downloaded from Google. Some of these images may be copyrighted. If so they will be removed from this blog. Thank you.

Comments