ஈசனின் ஈழம் - அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயம்

அகல் மின்னிதழுக்காக இலங்கைச் சிவாலயங்கள் பற்றி எழுதப்பட்ட ஒரு கட்டுரைத் தொடர் ஈசனின் ஈழம்.

இரண்டாவது கட்டுரை அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயம் பற்றியது.

மின்னிதழ் இணைப்பு இதோ: ஈசனின் ஈழம் (2016 November)
***



கிழக்கிலங்கையின் புகழ் பெற்ற புராதனமான ஆலயமே அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயமாகும். இது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அமிர்தகழி எனும் ஊரில் அமைந்துள்ளதுடன் அண்ணளவாக மட்டக்களப்பு நகருக்கு மூன்று கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.

இவ் ஆலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற சிறப்புடையதாகும். ஆலயத்தின் முன்னே ஒரு குருந்தை மரம் காணப்படுவதுடன்  கொக்கட்டி, அரசு முதலான பல மரங்களும் சூழக் காணப்படுகின்றன.

கருவறையில் சிவலிங்கம் மூர்த்தியாகக் காணப்பட்ட போதிலும் இன்று அதற்கு முன் பிள்ளையார் சிலையும் வைக்கப்பட்டு வழிபடப்படுவதால் மாமாங்கேஸ்வரர் ஆலயம் இன்று மாமாங்கப்பிள்ளையார் ஆலயம் என்றும் அழைக்கப்படுகின்றது. பண்டிதர். வி.சி. கந்தையா அவர்களின் கருத்துக்கு இணங்க இது நம்பிக்கை ஒரு சார்ந்த வழிபாடாக அமைகின்றது.

ஆலயத்துடன் தொடர்புபட்ட வரலாறுகள் வெவ்வேறு இடங்களில் வேறுபட்டதாக இருக்கின்றன.

இராமாயண காலத்துடன் இவ்வாலயத்தின் வரலாறு பின்னப்பட்டுள்ளது. இராம – இராவண யுத்தம் முடிந்து திரும்பும் வழியில் இராமர் மற்றும் சீதை இங்கு ஓய்வு எடுத்ததாகவும் அனுமனை வழிபாட்டிற்குரிய லிங்கம் ஒன்று எடுத்து வரப்பணித்ததாகவும் அனுமன் தாமதமான காரணத்தினால் இராமர் மண்ணால் லிங்கம் அமைத்துப் பூசை செய்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த லிங்கமே இன்று கருவறையின் காணப்படும் லிங்கம் என் நம்பப்படுகின்றது.  இராமரின் கோதண்டம் ஊன்றப்பெற்றதால் தீர்த்தக்குளம் உருவாகியதாகவும் சொல்லப்படுகின்றது. இது மாமாங்கத்தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்றது. அனுமனால் கொண்டுவரப்பட்ட லிங்கம் குளத்தினுள் புதைக்கப்பட்டதாகச் சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் சில இடங்களின் அனுமன் வாலில் இராவணாதியரினால் வைக்கப்பட்ட நெருப்பை அணைத்த குளம் என்றும் குறிப்புகள் உள்ளன.

காசியிலிருந்து கொண்டுவரப்பட்ட அவிமுத்தித் தீர்த்தமும் அனுமனால் இக்குளத்தில் கலக்கப்பட்டது என்பதும் ஒரு வரலாறு. இக்குளம் ஆலயத்தின் கிழக்கே அமைந்துள்ளது. அனுமன் கொண்டு வந்த லிங்கம் குளத்தில் புதைக்கப்பட்டதால் சக்திவாய்ந்த குளமாகக் கருதப்படுகின்றது.
அத்துடன் இதிலிருந்து பெறப்படுகின்ற சந்தனச்சேறு மகிமை வாய்ந்த்தாகவும் தோல் நோய்களுக்கு ஒரு நிவாரணியாகவும் கருதப்படுகின்றது.

இராமர் வழிபட்ட ஆலயத்தைக் காலப்போக்கில் காடு மூடிக்கொண்டதாகவும் பின் வேடர்களால் லிங்கம் கண்டுபிடிக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டமையாலும், அதில் இரண்டு வேடர்களான மாமாங்கன், பிள்ளையான் ஆகிய இருவரது பெயர்களும் சேர்க்கப்பட்டு மாமாங்கப்பிள்ளையார் ஆலயம் ஆனதாகவும் சொல்லப்படுவதுண்டு.

மேலும் மட்டக்களப்பு மான்மிய வரலாற்றின் படி அரசி ஆடகசவுந்தரியின் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்ததாக ஒரு சம்பவம் குறிப்பிடப்பட்டுள்ளது. அழகற்ற உருவமுடைய அரசி இவ்வாலயத் தீர்த்தத்தில் மூழ்கியதால் அழகான உருவம் அடைந்ததாகச் சொல்லப்படுகின்றது. ஒரு அரசி குளித்ததால் இத் தீர்த்தம் மாமங்கை நதி என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது.

ஆலயத்தில் மூன்று நேரப் பூசைகள் இடம்பெறுகின்றன. இவ்வாலயம் ஆடி அமாவாசைத் தீர்த்த்துக்குப் பெயர்போனது. இங்கு ஆடியமாவாசை அன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வதுடன் பிதிர்கடன்களை நிறைவேற்றிக் கொள்கின்றார்கள்.
திருவிழா ஆடி அமாவாசைக்கு பத்து  நாட்களுக்கு முன் தொடங்கி ஆடி அமாவாசையுடன் நிறைவு பெறுகின்றது.

மேலதிக தொடர்புகளுக்கு.
மாமாங்கப் பிள்ளையார் ஆலயம்,
அமிர்தகழி, மட்டக்களப்பு,
இலங்கை.
தொலைபேசி இலக்கம் +94 – 65 - 2223578

ஞா. நிறோஷ். (நிறோஷ் ஞானச்செல்வம், இலங்கை)

***

இங்கு பயன்படுத்தப்பட்ட படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை, காப்புரிமைக்குட்பட்டதென அறிவிக்கப்படுமிடத்து அவை நீக்கப்படும். நன்றி.

Images : Downloaded from Google. Some of these images may be copyrighted. If so they will be removed from this blog. Thank you.



Comments