ஈசனின் ஈழம் - திருக்கேதீச்சரம்

அகல் மின்னிதழுக்காக இலங்கைச் சிவாலயங்கள் பற்றி எழுதப்பட்ட ஒரு கட்டுரைத் தொடர் "ஈசனின் ஈழம்".

நான்காவது கட்டுரை திருக்கேதீச்சரம் ஆலயம் பற்றியது. இது அகல் மின்னிதழின் தமிழ்ப்புத்தாண்டு சிறப்பிதழில் வெளியானது.

மின்னிதழ் இணைப்பு இதோ:
ஈசனின் ஈழம் (2017 April)
***


திருக்கேதீச்சரம்
 
“தெங்கம் பொழில் சூழ்ந்த திருக்கேதீச்சரத்தானே” என்று சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடப்பட்ட சிறப்புடையது திருக்கேதீச்சரத் திருத்தலம். இது இலங்கையின் வடக்குப் பகுதியில் மன்னார் மாவட்டத்திலுள்ள மாதோட்ட நகரில் அமைந்துள்ளது. இந்நகர் மாந்தை என்றும் அழைக்கப்படுவதுண்டு.

திருக்கோணேச்சரத்தைப் போலவே இதுவும் இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்று. இத்தலத்தில் கேது, வழிபாடு செய்ததாகவும் அதனால் கேதீச்சரம் என்ற பெயர் பெற்றதாகவும் சொல்லப்படுகின்றது.



 
இங்கு இறைவன் கௌரியம்பாள் சமேத கேதீச்சரநாதராக வீற்றிருந்து அருள் பாலிக்கின்றார். தல விருட்சம் வன்னிமரம். தீர்த்தம் பாலாவித் தீர்த்தம்.

இலங்கையில் நாயன்மாரால் பாடல் பெற்ற திருத்தலங்களுள் இதுவும் ஒன்று. திருஞானசம்பந்தராலும் சுந்தரராலும் பதிகம் பாடப் பெற்ற சிறப்புடையது திருக்கேதீச்சரம்.

பல வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகத் திகழ்ந்த ஆலயம் அன்னியர் ஆக்கிரமிப்பால் சிதைக்கப்பட்டுப் பின்னர் மீளக்கட்டுவிக்கப்பட்டது. இதில் ஆறுமுக நாவலர் அவர்களுக்குக் கணிசமான பங்கு உண்டு.

மீள் கட்டுமானப் பணிகளின் போது சிவலிங்கம், நந்தி, சோமாஸ்கந்தர், பிள்ளையார் ஆகிய சிலைகள் கண்டெடுக்கப்பட்டு உரிய இடங்களில் நிறுவப்பட்டன. இங்கு கிடைத்த மிகப்பெரிய சிவலிங்கத்தில் ஒரு சிறிய பழுது உருவாகியதால் அதை மேற்கில் வெளிப்பிரகாரத்தில் நிறுவியிருக்கிறார்கள். அதுவே மகாலிங்கம் என்றழைக்கப்படுகின்றது.

மகாலிங்கம்

மூலவராக அமையப்பெற்ற சிவலிங்கமானது காசியிலிருந்து தருவிக்கப்பட்டதாகத் தல வரலாறு சொல்கிறது.

சிவராத்திரியின் போது பாலாவி நீர் பக்தர்கள் கைகளாலேயே கொண்டுவரப்பட்டு அவர்களாலேயே நீராட்டுவிக்கப்படுகின்றது மகாலிங்கத் திருமேனி.


 ​

ராமாயணத்துடன் தொடர்புடையதாக, ராவணன் மனைவி மண்டோதரியின் தகப்பன் மயன் மாந்தையை ஆண்டதாகவும், சிவ வழிபாட்டிற்காக இவ்வாலயத்தைக் கட்டுவித்ததாகவும் புராணக் கதைகள் சொல்கின்றன.

கொழும்பிலிருந்து மன்னார் மாவட்டத்திலுள்ள மாதோட்ட நகரைப் பேருந்து மூலமாக அடையலாம்.

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

சிவாய நம !
நிறோஷ் ஞானச்செல்வம்,
இலங்கை

2017.04.13
***

இங்கு பயன்படுத்தப்பட்ட படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை, காப்புரிமைகுட்பட்டதென அறிவிக்கப்படுமிடத்து அவை நீக்கப்படும், நன்றி.

Images: Downloaded from Google. Some of these images may be copyrighted. If so they will be removed from this blog. Thank you.

Comments