ஒரு கல்லூரி மாணவனின் விடுமுறைக்காலம்
அகல் மின்னிதழ், தமிழ்ப்புத்தாண்டு சிறப்பிதழில் நாட்குறிப்புகள் பகுதிக்காக வெளியானது.
இணைப்பு இதோ:
அகல் மின்னிதழ் (2017 April)
***
இணைப்பு இதோ:
அகல் மின்னிதழ் (2017 April)
***
விடுமுறை
விட்டாலும் விட்டார்கள் தூங்கி எழுவதுதான் தொழிலோ என்பது போல் ஆகிவிட்டது
வாழ்க்கை. விரிவுரைகள், பாடக்குறிப்புகள், தேர்வுகள் இவையெதுவுமில்லாத ஒரு
நிம்மதி நிறைந்த காலப்பகுதியல்லவா, அவ்வளவு இலகுவாகக் கடந்துபோக விடலாமா?
இந்த விடுமுறைக்கும் ஏதோ ஒரு பலம் இருக்கின்றது. இல்லாவிட்டால் சுறுசுறுப்பானவர்களைக் கூடச் சோம்பேறிகளாக மாற்றிவிடுகிறதே என்ற சிந்தனை தோன்றும் பொழுதுகளில் சிரித்துக் கொள்வதைத் தவிரச் செய்வதற்கொன்றும் இல்லை. ஏனெனில் நான் ஒன்றும் அத்துணைச் சுறுசுறுப்பானவன் இல்லையென்பது எனக்குத்தானே தெரியும்.
***
அலாரம் அடிக்கின்றதோ இல்லையோ நான்கு மணிக்கெல்லாம் விழித்துக் கொள்வது வழக்கம். சில நாட்களில் அலாரம் அடிக்கும் முன்பே எழுந்து அலாரத்தை நிறுத்தி விடுவதுமுண்டு. விடுமுறைக் காலத்திலும் இதே கதை தான் என்பதே என்னைப் பொறுத்தவரை மிக வேதனையான ஒன்று.
எனக்கு வாய்த்த நண்பர்கள் சூரியன் சூடு வைத்தும் எழும்பாமல் மதியம் பதினொரு மணி வரை தூங்குவதாகச் சொல்லும் போது சற்றுப் பொறாமையாகத்தானிருக்கும். என்ன செய்வது, “நம்ம டிசைன் அப்படி” என்றெண்ணி மனதைத் தேற்றிக் கொள்கின்றேன்.
நேரத்துடன் விழித்துக் கொள்ளும் நாட்களில் விடுமுறை தானே என்றெண்ணி மீண்டும் கண்ணயர்கையில் சற்று நேரத்தில் அம்மாவின் குரல் தூக்கத்தைக் கலைத்துவிடும். வேண்டா வெறுப்பாக எழுந்திருப்பதே இந்த விடுமுறை நாட்களின் எழுதப்படாத நியதியாக இருகின்றது.
எனக்கு வாய்த்த நண்பர்கள் சூரியன் சூடு வைத்தும் எழும்பாமல் மதியம் பதினொரு மணி வரை தூங்குவதாகச் சொல்லும் போது சற்றுப் பொறாமையாகத்தானிருக்கும். என்ன செய்வது, “நம்ம டிசைன் அப்படி” என்றெண்ணி மனதைத் தேற்றிக் கொள்கின்றேன்.
நேரத்துடன் விழித்துக் கொள்ளும் நாட்களில் விடுமுறை தானே என்றெண்ணி மீண்டும் கண்ணயர்கையில் சற்று நேரத்தில் அம்மாவின் குரல் தூக்கத்தைக் கலைத்துவிடும். வேண்டா வெறுப்பாக எழுந்திருப்பதே இந்த விடுமுறை நாட்களின் எழுதப்படாத நியதியாக இருகின்றது.
***
மற்றைய நாட்களில் வீடு வாசல் சுத்தம் செய்வதைப் பற்றியெல்லாம் எண்ணாமல் ஓடிக் கொண்டிருப்பதற்குச் சொல்லி வைத்தாற் போல் மொத்தமாக இழுத்து கட்டிப் போட்டு விடுகிறது விடுமுறை. காலையிலேயே இயந்திர கதியில் இயங்கி வளவைக் (premises) கூட்டிச் சுத்தமாக்கி முடித்ததும் தான் அந்த விடுமுறைக்குரிய சுதந்திரம் தொடங்குகின்றது.
இனி நமக்காகக் காத்திருந்தது போலச் சின்னச் சின்ன வேலைகள் எங்கெங்கு இருந்தெல்லாமோ வந்து குவிகின்றன. இவை எல்லாவற்றையும் சமாளித்து முடித்து மேலேழுந்த பிறகே கொஞ்ச நேரம் எனக்காக வந்து சேர்கின்றது.
***
கவிதை எழுத வேண்டும், நேரத்துக்குத் தருவதாகச் சொன்ன கட்டுரைகளை எழுதி முடிக்க வேண்டும், சில பல ஓவியங்களை வரைய வேண்டுமென்றெல்லாம் பல “To - Do” பட்டியல்கள் உள்ளே ஓடிக் கொண்டிருந்தாலும் அவற்றையெல்லாம் விட்டுவிட்டுச் சும்மா படம் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கின்றேன்.
சாப்பிட்டுச் சாப்பிட்டுத் தூங்குவதைப் போலவே ஒரு நாளைக்கு மூன்று நான்கு படங்கள் பார்த்துவிடுவதென்ற இலக்குகளை எல்லாம் கூட நிறைவேற்றிவிட்டேன். கொஞ்சம் உடற்பயிற்சியையும் இலக்காக வைத்துக் கொள்ள வேண்டும்.
***
நாள்தோறும் நண்பர்களுடன் கடற்கரைப் பயணம். கடற்கரையோரக் கலந்துரையாடல்கள் என்ற பெயரில் அலப்பறைகள். போதாக்குறைக்குச் சும்மா இருக்காமல் குறும்படம் எடுக்கின்றோம் பேர்வழி என்று எதையோ ஒளிப்பதிவு செய்து ஒப்பேற்றி வெளியிட்டாயிற்று.
வழக்கம் போல் நல்ல கருத்துக்களும் வந்தன, முன்னேற்றத்தை நோக்கிச் செலுத்தும் கருத்துகளும் வந்தன. இதைவிடப் புதுமையாக நீங்களெல்லாம் எங்கு உருப்படப்போகின்றீர்கள் என்பது போன்ற கருத்துகளும் வந்தது. மனிதர்களைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. புது அனுபவம். மொத்தத்தில் எல்லோருக்கும் நன்றி சொல்லிவிட வேண்டும்.
ஆக ஒரு படைப்பால் அல்லது படைப்பாளியால் எல்லோரையும் திருப்தி செய்துவிட முடியாதென்பது உண்மை.
***
எங்கிருந்து வந்து சேர்ந்ததோ தெரியவில்லை. அடியடியென்று அடித்துத் துவைத்து முறுக்கிக் காயப் போட்டுவிட்டது காய்ச்சல். விடுமுறை நாட்களில் வரும் நோய்கள் அதிக அயர்ச்சியைத் தந்துவிடுகின்றன. எல்லாவற்றையும் கடந்தாக வேண்டியிருகின்றது. “All is well”, இதுவும் கடந்து போகும்.
நோயுற்ற போது துணையிருக்கும் உறவுகளும் நண்பர்களும் வாய்ப்பது வரம். இறைவனுக்கு நன்றி.
எப்படியும் இன்னும் ஐந்து நாட்களில் வரப்போகின்ற பண்டிகைக்காக மக்களெல்லாம் உற்சாகமாக ஆயத்தமாகும் போது நானும் ஒரு புதிய விடியலுக்காகக் காத்திருக்கப்போகின்றேன்.
***
விடுமுறை இப்போது என்ன செய்ய? இயர் போன் புன்னகைக்கிறது. நண்பர் ஒருவர் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஹரிஹரனின் ஹிந்திப் பாடல் ஒன்று அலைபேசியில் அழைக்கிறது. நேற்று இரவு தரவிறக்கம் செய்யும் போது கேட்டது. இப்போது அருகாமையில் வேறு எந்தப் பணியும் இல்லை... கொஞ்ச நேரம் விடுமுறையில் ஹரிஹரனுடன் லயிக்கப் போகிறேன்.
திமி திமி...
(இறுதிப் பந்தி நண்பரின் இணைப்பு, அந்தப் பாடலை அறிமுகப்படுத்தியது வேறு யாருமல்ல, அகல் மின்னிதழ் ஆசிரியர் நண்பர் சத்யா ஜி.பி-யே தான். :) )
நிறோஷ் ஞானச்செல்வம்,
இலங்கை
2017.04.13
***
இங்கு பயன்படுத்தப்பட்ட படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை, காப்புரிமைகுட்பட்டதென அறிவிக்கப்படுமிடத்து அவை நீக்கப்படும், நன்றி.
Images: Downloaded from Google. Some of these images may be copyrighted. If so they will be removed from this blog. Thank you.
Comments
Post a Comment