an Gorta Mór

உருளைக்கிழங்குகளின்
தோற்றம் கண்டு
பழிக்க வேண்டா!

அவைகளுக்குள்ளும்
ஈரம் கொஞ்சம்
இருக்கக்கூடும்

அவை,
பிரிட்ஜெட் ஓடான்னெல்களின்
கதையை உங்களுக்குச்
சொல்லக்கூடும்

ஆட்சியின் பசிக்குத்
தானியம் படைத்தும்
பசியால் மடிந்தழிந்த
மக்களின் சோக கீதங்களை
இசைக்கக்கூடும்

குத்தகை விவசாயிகளின்
வாழ்க்கையைத் தீர்மானித்த
கதையைச்
செரித்து வாழ்ந்த
உயிர்களைப் பற்றி
உரைக்கக்கூடும்

கொத்துக்கொத்தாய்
இடம்பெயர்ந்த உயிர்களின்
அட்ச ரேகை தீர்க்க ரேகையை
அவை சொல்லக்கூடும்

ஃபைடொப்தரா ஆதிக்கத்தின்
ஐரிய அவலங்களுக்கான
நினைவுச்சின்னமாக
இருக்கக்கூடும்

பிற்கூற்று வெளிறலால்
கொலையுண்ட தம் சோகத்தை கூட
அவை
வெளிப்படுத்தலாம்

ஒவ்வொரு
உருளைக்கிழங்கின்
கடைசிப் பயணமும்
an Gorta Mórஐ
உங்கள் ஞாபகத்திற்குக்
கொண்டு வரவேண்டியதில்லை

அடுத்த வேளை
உணவு தேடும் ஒரு உயிருக்கு
உங்கள்
ஒரு வாய் உருளைக்கிழங்காவது
பசியாற்றட்டும்!

an Gorta Mór - Great Famine
(Irish Potato Famine)

***

Bridget O'Donnelle: great famineஆல் பாதிக்கப்பட்ட ஒரு பெண்

Phytophthora infestans:
Potato Blight (உருளைக்கிழங்கில் பிற்கூற்று வெளிறலுக்குக் காரணமான ஒரு fungus)

நிறோஷ் ஞானச்செல்வம்
2018.04.05

Comments