என்னைப் பிரியாதிரு!
இன்மாலை நேரத்தின் ஏகாந்தம் வேண்டேன்என்
மென்னகையோய் பக்கம் விலகுதலான் - என்னிலை
நன்னிலை ஆக்கிடும் ஞாயமுண்டேல் கண்மணி
என்னைப் பிரியா திரு! (1)
கன்னற் சுவையென்னே கண்டின் சுவையதும்
என்னேயாம் நீயின்றேல் இன்னாதே - என்னிலை
நன்னிலை ஆக்கிடும் ஞாயமுண்டேல் கண்மணி
என்னைப் பிரியா திரு! (2)
முன்னாள் செயல்வரவோ மொத்தத் தவப்பலனோ
என்னாளாய் நீகிடைத்த தென்பேறாம் -
என்னிலை
நன்னிலை ஆக்கிடும் ஞாயமுண்டேல் கண்மணி
என்னைப் பிரியா திரு! (3)
(ஒருவிகற்ப நேரிசை வெண்பாக்கள்)
***
ஞாயம் - நியாயம்
கன்னல் - கரும்பு
கண்டு - கற்கண்டு
***
பொருள்:
1) மென்மையான முறுவலுடையவளே, இனிமையான மாலை நேரத்துத் தனிமை தேவையில்லை, நீ என் அருகாமையை விட்டு விலகுவதாயின். ஆதலால் எனது நிலையை நன்னிலையாக மாற்றுவதற்கு ஏதேனும் நியாயம் இருக்குமாயின் கண்மணி,
நீ என்னைப் பிரியாது இருப்பாயாக!
2) கரும்பின் சுவையென்ன? கற்கண்டின் சுவையும் என்னவாகும்? நீயில்லாவிட்டால் இவை இனிமையற்றனவாகும். ஆதலால் எனது நிலையை நன்னிலையாக மாற்றுவதற்கு ஏதேனும் நியாயம் இருக்குமாயின் கண்மணி,
நீ என்னைப் பிரியாது இருப்பாயாக!
3) முன்பிறப்புகளின் நான் செய்த கன்ம பலன்களின் நல்வரவோ இல்லை நான் செய்த தவத்தின் மொத்தப்பலனோ.. எனது ஆளாக (என்னுடையவளாக) நீ கிடைத்தது என் பேறாகும். எனது நிலையை நன்னிலையாக மாற்றுவதற்கு ஏதேனும் நியாயம் இருக்குமாயின் கண்மணி,
நீ என்னைப் பிரியாது இருப்பாயாக!
***
நிறோஷ் ஞானச்செல்வம்
2017.09.08
Comments
Post a Comment