மெய்நிகர் உலகம்!

இந்த மெய்நிகர் உலகம் தான்
எத்துணை விசித்திரமானது!

இங்கு,
புத்தர்களெல்லாம்
பித்தர்களாகவும்
பித்தர்களெல்லாம்
புத்தர்களாகவும்
தெரிகின்றார்கள்...

இந்த மெய்நிகர் உலகம் தான்
எத்துணை விசித்திரமானது!

இங்கு,
பாலின அறுவைச் சிகிச்சைகள் கூட
சத்தமில்லாமல் நிகழ்த்தப்படுகின்றன.

இந்த மெய்நிகர் உலகம் தான்
எத்துணை விசித்திரமானது!

தேடுவதையே பெற்றுக்கொள்கின்றோம்
என்பதைத் தாண்டி - எம்
தேடலைக் கூடத்
திசைமாற்றுகின்றது.

இந்த மெய்நிகர் உலகம் தான்
எத்துணை விசித்திரமானது!

அமைதிப்
பிளம்புக்குள்ளே - ஒரு
ஆரோகணப் பேரிரைச்சல்
ஒளிந்திருக்கும் என்பதை
யார் கண்டிருக்கக்கூடும்.

இந்த மெய்நிகர் உலகம் தான்
எத்துணை விசித்திரமானது!

இங்கு,
என் புலம்பல்கள் கூட
மன்னிக்கப்படுகின்றன,
மறக்கப்படுகின்றன...

இந்த மெய்நிகர் உலகம் தான்
எத்துணை விசித்திரமானது!

இது,
என் இருப்பைத் தொலைத்துலாவும்
இருட்பூங்காவாகத்
திகழ்வதில்
ஆச்சரியமில்லை...

நிறோஷ் ஞானச்செல்வம்
2017.08.28

Comments