அவள்!

திடீரென்று பேசச் சொன்னார்கள்
தடுமாறி விட்டேன். எனக்குப் பேச்செல்லாம் வராது, எழுத்தோடேயே நிறுத்திக் கொள்கின்றேன் என்றாலும் அவர்கள் கேட்பதாயில்லை.

நீ என்ன சொல்கிறாய் என்றேன்.

அவளும் கூட அதைக் கேட்பதாயில்லை.
எதையாவது பேசேன்.. என்றாள்.

எதைப் பேச..
நான் எழுதட்டுமா என்றேன்.
வேண்டாம் பேசு என்றாள்.

வாங்கி வைத்த குளம்பி ஆறிவிடப் போகிறது, குடித்துவிட்டுப் பேசலாமே என்றேன்.
இல்லை, குடித்துக்கொண்டே பேசலாம் என்றாள்.

நீயும் வார்த்தை விளையாட்டில் வல்லவள் தான்,
ம்... உன் விருப்பம் என்றேன்.

உதிரந்த புன்னகையை இதழ்களுக்குள்ளே அடக்கிக்கொண்டாள்.

நீ பேசு என்பது போல் கையை அசைத்துச் சைகை செய்தாள்.

காடு, மலை தொடங்கிக் காததூரம் சென்று இலக்கண, இலக்கியம் பேசினால் அலுப்படிக்கிறது என்பாய்..
சரி, சுதி பிசகி ஒரு பாட்டைப் பாடலாம் என்றால் கர்ணகொடூரமாய்ப் பாடிக் கடுப்பாக்காதே என்பாய்..
என்றோ எழுதி மனனம் செய்துவைத்த கவிதையைச் சொன்னால் பொய் சொல்லாதே என்பாய்...
வேறு எதைத் தான் பேசட்டும் என்றேன்.

கோத்திருந்த விரல்களில் நெருக்கம் கூட்டி..
ஒற்றை விரலை என் உதட்டில் வைத்து..

பேசாதே.. இந்த கால் நனைக்கும் கடலலைகள் காற்றோடு ஏதோ பேசுகின்றன. அதையாவது கேட்கலாம் என்றாள். மறுப்பதற்கில்லை.

நெற்றி மீது விழும் ஒற்றை முடியை ஒதுக்கும் விரல்களால் இந்தப் பிரபஞ்ச இயக்கத்தை நிறுத்துகின்றாள் அவள்.

நிறோஷ் ஞானச்செல்வம்
2017.07.22

Comments